×

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் MSME நிறுவனங்களின் வளர்ச்சி இரு மடங்காக உயர்வு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் MSME நிறுவனங்களின் வளர்ச்சி இரு மடங்காக உயர்வு என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 27.06.2023 அன்று நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் தின விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் சிறந்த தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்கள். மேலும் சிறப்பாக பணியாற்றிய கோவை, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய மாவட்ட தொழில் மைய மேலாளர்களுக்கு திட்டங்கைளை சிறப்பாக செயல்படுத்திய கூடுதல் இயக்குநர் அவர்களுக்கும், மத்திய மின்பொருள் சோதனைக் கூடத்தில் பல புதிய சோதனை வசதிகளை ஏற்படுத்தி சிறப்பாக பணியாற்றிய துணை இயக்குநருக்கும் விருதுகள் வழங்கினார்.

விழாவில், அமைச்சர் பேசும்போது “கழக அரசு பொறுப்பேற்றது முதல், தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் திட்டங்களுக்கான நிதியினை அனைத்து மாவட்டத்திற்கும் சமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கழக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய தென்மாவட்டங்களில் MSME நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ. 73 கோடியே 98 லட்சத்திலிருந்து ரூ.115 கோடியே 77 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ரூ.16 கோடியே 29 லட்சத்திலிருந்து ரூ. 39 கோடியே 92 லட்சமாக உயர்ந்து இரு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த முயற்சியின் விளைவாக தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 7,926 புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அனைத்து மாவட்டத்திலும், சிறப்பாக செயல்பட்ட தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 10 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை கொண்டு செயல்பட துவங்கிய MSME துறை கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ரூ.660 கோடியே 20 லட்சம் மானியத்துடன் ரூ. 1,952 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 23 ஆயிரத்து 188 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதாரத்திலும் சமூக நீதியை நிலை நாட்டும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 6,793 மகளிர், 2,422 பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர், 1,590 சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 805 இளைஞர்களை புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கி உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாதனைகளை நிகழ்த்த உறுதுணையாக இருந்த MSME அரசு செயலாளர், தொழில் வணிக ஆணையர், துறை உயர் அலுவலர்கள் அனைத்து மாவட்ட தொழில் மைய மேலாளர்கள், களப் பணியாளர்கள் என அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். MSME தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகளை வழங்கி சிறந்த சேவை ஆற்றிய வங்கி மேலாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். MSME துறையில், தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர, இளைஞர்கள், துறை அலுவலர்கள், வங்கியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்“ இவ்வாறு பேசினார். மேலும், இந்நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தான கையேடு 2.0 வினை வெளியிட்ட அமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் ஃபேம் டிஎன் நிறுவனத்திற்கும், ஷெராஃபிஸ் நாலெட்ஜ் சொல்யூஷன்ஸ் (Sherafis Knowledge Solutions) நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

The post தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் MSME நிறுவனங்களின் வளர்ச்சி இரு மடங்காக உயர்வு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Delta ,Southern ,Minister ,T. Moe Andarasan ,Chennai ,Southern Distrates ,Tamil Nadu ,T.R. Moe Andarasan ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும்...